நம்மையும்விட  இழிந்த வாழ்க்கை
    

              முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் நிறைய முயல்கள் வாழ்ந்து வந்தன. ஒரு நாள் அவை அனைத்தும் ஒரு கூட்டம் போட்டன. தமது அவல வாழ்க்கை பற்றி அவை புலம்பின.

             "மாந்தர்களும், நாய்களும், கழுகுகளும், பிற விலங்குகளும் நம்மை அழித்து வருகிறார்கள். அஞ்சி அஞ்சி நாம் வாழ வேண்டியிருக்கிறது. நமக்கு ஓர் அமைதியான வாழ்வே கிடையாது. இப்படி வாழ்வதைவிட  இப்பொழுதே நாம் எல்லோரும் உயிரை மாய்த்துக் கொண்டால் என்ன? ஏதாவது ஒரு குட்டைக்குள் விழுந்து மூழ்கி விடுவோம்!" என்று எண்ணி எல்லா முயல்களும் ஏரியில் விழுந்து சாகலாம் என ஓர் ஏரிக் கரையை நோக்கிச் செல்கின்றன.

     முயல்கள் வருவதைக் கண்ட கரைமேல் இருந்த தவளைகள், தொப்பு! தொப்பென்று தண்ணீருக்குள் குதித்தன. அப்பொழுது ஒரு முயல், " நண்பர்களே! நில்லுங்கள் நீருக்குள் குதிக்காதீர்கள். அந்தத் தவளைப் பாருங்கள். அவற்றின் வாழ்க்கை, நம்மைவிட இழிவாக இருக்க வேண்டும். அதனால்தான் அவை எளியவர்களாகிய நம்மைக் கண்டே இவ்வளவு அஞ்சுகின்றன. அவையே வாழும் போது நமக்கென்ன?" என்று கூறியது.

     முயல்கள் எல்லாம் அதைக் கேட்டு தம் முடிவை மாற்றிக் கொண்டன. பழையபடி வாழ்க்கையைத் தொடங்கின. எப்படி தற்காத்துக் கொண்டு வாழ்வது என்பதைப் பற்றி ஆராய்ந்தன. தங்கள் வலிமையையும் தாங்கள் கண்டு அஞ்சுபவர்களின் வலிமையையும் எண்ணிப் பார்த்தன. அவற்றிடையே இவ்வுலகத்தில் தாங்களும் வாழ்வதற்கான பாதுகாப்பான இடம் இருக்கவே செய்கின்றது; மனமிருந்தால் வழிகளும் தாமே தங்களுக்குத் திறக்கின்றன என்பதை அறிந்துகொண்டு அறிவோடு வாழ்ந்து வந்தன.

 ::  தமிழ் நெறி

 

Free Web Hosting