தங்க நாணயம்
    

              வெளிநாடு ஒன்றில் பஞ்சம் ஏற்பட்டது.  மக்கள் பசியால் இறக்க ஆரம்பித்தனர். பணக்காரர் ஒருவர் இருந்தார். அவர் எல்லாச் சிறுவர்களுக்கும் தினந்தோறும் உரத்தி (ரொட்டி) கொடுத்து வந்தார்.

           சிறுவர்கள் அனைவரும் ஒருவரையொருவர் இடித்துத் தள்ளிக் கொண்டு பெரிய உரத்தியை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஒரே ஒரு சிறுமி மட்டும் ஓரத்தில் பேசாமல் நின்று கொண்டிருந்தாள். கடைசியில் கூடையில் ஒரு சிறிய உரத்தியே மிஞ்சியிருந்தது.  அவள் அதை மகிழ்ச்சியோடு எடுத்துக்கொண்டு சென்றாள்.

       மறுநாள் மீண்டும் உரத்தி வழங்கப்பட்டது. அந்த அப்பாவிச் சிறுமிக்கு இன்றும்கூட மிகச் சிறிய உரத்தியே கிடைத்தது. சிறுமி வீட்டிற்கு வந்து உரத்தியைப் பிய்த்தபொழுது உரத்திக்குள்ளிலிருந்து ஒரு தங்க நாணயம் வெளிப்பட்டது. அவளுடைய அம்மா “தங்க நாணயத்தை அந்தப் பணக்காரரிடம் கொடுத்துவிட்டு வந்து விடு" என்றார். சிறுமி நாணயத்தைக் கொடுக்க ஓடினாள்.

    பணக்காரரைப் பார்த்து “ஐயா என்னுடைய உரத்திலிருந்து இந்த நாணயம் விழுந்தது. ஒரு வேளை மாவில் விழுந்து இருக்கலாம் என்று நினைக்கிறேன். உங்கள் தங்க நாணயத்தைக் கொடுக்க வந்திருக்கிறேன். நாணயத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்!" என்றாள்.

    பணக்காரர் “இது உன் மன நிறைவுக்குக் கிடைத்த பரிசு!" என்றார்.

     சிறுமி, தலையசைத்து மறுத்தாள். “என்னுடைய மகிழ்ச்சிக்குப் பயன் எனக்குக் அன்றே கிடைத்து விட்டது. நான் கூட்டத்தில் அடி படவில்லை அல்லவா?" என்றாள். பணக்காரர் அவளை மிகவும் பாராட்டியதோடு அவள் படிக்க உதவியும் செய்தார்.

 

 ::  கோகுலம்
Free Web Hosting