இலக்கணத்தைப் பற்றி சில வரிகள்........

 இலக்கிய மின்றேல் இலக்கண மின்றே

  எள்ளின் றாகின் எண்ணெயு மின்றே

  எள்ளினின்(று) எண்ணெய் எடுப்பது போல்

  இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம்.         (அகத்திய சூத்திரம்)

             எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பதற்கு முன், அதனை வழங்கும் எட்செடி இருந்தாக வேண்டும். அச்செடியானது முளைத்துப் பருவப்பட்டு வளர்ந்த பின்னரே எள் காய்க்க முடியும். எள்ளுக்காய் உருவெடுப்பதற்குப் பருவத்தால் எட்செடியில் பூவர  வேண்டும். பூ வந்த பின் வளர்ச்சிக் கட்டங்கள் நிறைந்து காய்முற்றினால்தான் எள் கிடைக்கும்.

            இப்படியாக; எள் கிடைத்த பின் அதனைச் செக்கிலிட்டு ஆட்டி எண்ணெய் எடுக்க முடியும். ஒரு தாய்மொழியின் தனித்தன்மையான மொழியியல் அமைப்புகளும் அது பற்றிய சிந்தனைகளின் எண்ணித் துணிந்த கொள்முடிபுகளும் அறிவியல் - வரலாற்று முறையில் இதுபோலத்தான் உருவாகின்றன.

           அவ்வகையில் மேற்கண்ட அகத்தியச் சூத்திரம் மிக எளிமையாக எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்படும் உவமையின் வாயிலாக மொழியின் உருவாக்கத்தை உருவகப்படுத்திக் காட்டியிருப்பதானது நாம் எண்ணி எண்ணி இறும்பூது எய்தத்தக்கதாகும்.

           ஒரு தாய்மொழிக்கு அதனையுடைய மக்கள் (இனம்) இல்லாமல் இயக்கமில்லை. அஃது, அதற்குரிய மக்களோடு உள்ளும் புறமும் இயைந்து இயங்கும் இயல்பு பெற்றது. அவ்வகை இயங்குவதால் வாழ்க்கை எனப்படுகிறது.  அந்த இயங்குதலாகிய வாழ்க்கையின் நடப்பிலிருந்து வாழ்வியலும் வாழ்வியலிருந்து வழக்காறுகளும் தோன்றுகின்றன.

           தோன்றிய வழக்காறுகள் ஒரு தாய்மொழியில் ஊன்றி நிற்கின்றன. மக்களின் வாய்வழக்கிலும் கற்றுவல்ல சான்றோர்களின் நெறி செய்த ஏட்டு வழக்கிலும் அவை வழங்குகின்றன ( இயங்குகின்றன). அவை ஒரு தலைமுறையோடு ஒழிந்து போகாமல் அவ்வினத்தின் ஒவ்வொரு தலைமுறைக்கும் வழிகாட்டியாகி ஓங்கி ஆட்சி செய்கின்றன. அவற்றின் வழிதான் தனக்கேயுரிய ஒரு தனித்தன்மையான தோற்றத்தை அவ்வினம் பெற்று வருகின்றது.

             வாழ்வு என்னும் அத்தொடர்ச் செலவில், அம்மொழிக்குப் பிறப்பால் வழிவழி உரிமை பெற்ற மக்களால் உற்றும் உணர்ந்தும் பெறப்படும் அறிவுணர்வுத் துய்ப்புகளிலிருந்து உருவாகுவதே இலக்கியம். மனத்தின் இயல்புக்கூறுகள் சுவையாக்கிச் சொல்லாக்கிச் சொல்வடித்த ஓவியமாகி மீண்டும் பயின்று துய்க்கும் உள்ளத்தில் உயிர்ப்பைச் சுரப்பது இலக்கியம். உள்ளத்தைப் புதுக்கி உயரவல்லார்க்கு எதிர்கால வாழ்வின் வடிவத்தை உலக  இயற்கையில் கணித்துக் கவனமாகச் செதுக்குவது இலக்கியம்.

             அத்தகைய உயிர்ப்பான மொழிக்குள்ளும் அதன் உயர்ந்த அடைவு வடிவமான இலக்கியத்துக்குள்ளும் அமைந்து இயங்குகின்ற வாழ்வின் பாங்குகளை இழைத்துணர்ந்து கண்ட வரம்புகளின் வெளிப்பாடே இலக்கணம்.

          இவ்வாறு, காலந்தோறும் வாழையடி வாழைப் போல் தமிழ்மொழியின் இயங்கும் ஒழுங்குகளை ஆராய்ந்து கண்டறிந்த மொழியியல் முனைவர்கள் சான்றுடன் நிறுவிக் காட்டிய காரண விளக்கங்களே தொல்காப்பியம், நன்னூல் முதலிய எண்ணற்ற இலக்கண நூல்கள்.

               தமிழ் இலக்கண வரலாறு, ஓர் உண்மையை உள்ளது உள்ளபடியே உடைபடமாலும் தடைபாடமலும் உரைக்கின்றது. கண்டு காட்டப் பெற்ற இலக்கண கூறுகளுள் சிலவன திருத்தப் பெற்றும்; சிலவன தவிர்க்கப் பெற்றும்; சிலவன புதுக்கப் பெற்றும்; சிலவன தழுவப்பெற்றும்; சிலவன புதிதாய்க் கண்டு காட்டப்பெற்றும் வந்துள்ளன. அவற்றுள் காலப்பெறுங்கடலில் கலங்கரை விளக்கங்களாக நின்று நிலைத்தவற்றுள் தலையாயவை தொல்கப்பியமும் நன்னூலுமே ஆகும். பிறவெல்லாம் பெரும்பபாளும் இவற்றின் சாயல்களே.

 

ஆசிரியர் : திரு. இர. திருச்செல்வம் ( தமிழியல் ஆய்வுக் களம்)

Free Web Hosting