பிறமொழிச் சொற்களைக் கலந்தால்தான் தமிழ் வளருமா?

"பிறமொழிச் சொற்களைக் கலந்தால்தான் தமிழ் வளரும்" என்பது உண்மக்கு மாறானது. "கற்களைக் கலந்தால்தான் அரிசி வளரும்" என்பதைப் போன்றது. தமிழ் வளரவேண்டிய நிலையில் இல்லை. ஏனெனில் தமிழ் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி இன்னும் இளமை குன்றாமலிருந்து, எழுத்துலகிலும், பேச்சுலகிலும், இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கிவருகின்ற மொழி.

தமிழின் சிறப்பைக் கெடுக்கவேண்டும் என்ற கெட்ட எண்ணம் கொண்ட தமிழ்ப் பகைவர்கள் சிலர், " தனித் தமிழ்ச்சொற்கள் சிலருக்குப் புரியவில்லை. ஆதலால் புரியும் தமிழில் எழுதுகிறேன்" எனக் கூறிப் பிறமொழிச் சொற்களை வேண்டுமென்றே புகுத்தித் தமிழை அழித்து வருகின்றனர்.

புரியும் மொழி, புரியா மொழி என எந்த மொழியிலும் இல்லை. ஒரு மொழி புரியவில்லை  என்றால், அவன் அந்த மொழியைப் படிக்கவில்லை என்பது பொருள், தமிழ் தெரியவில்லை என்றால் தமிழைப் படி. அதைவிட்டு நீயும் தமிழைப் படிக்காமல், தமிழ் அறியாதவனுக்குப் புரியும் படி எழுதுகிறேன் என்றால் அது எப்படி நியாயமாகும்? அப்படி எழுதினாலும் அது புது மொழியாக இருக்குமே யன்றி எப்படித் தமிழ் மொழியாக விருக்கும்? இக்கூற்று நல்லறிஞர்களால் நகைத்து ஒதுக்கத் தக்கதாகும்.

    அட்காக் கமிட்டி, லோக்சபா, ஜனாதிபதி, மஜ்தூர், ஆகாசவாணி எல்லாம் புரியும் போது, தமிழனுக்குத் தமிழ் புரியாது எனக் கூறுவது வெட்கக்கேடானது. ஆங்கிலச் சொற்களையும், வடமொழிச் சொற்களையும் நன்கு உச்சரிக்கும் தமிழனுக்குத் 'தமிழ் உச்சரிக்க வராது' எனக் கூறுவது மானக்கேடாகும்.

தமிழ் சொல்வளம் மிகுந்த மொழி. புதிதாகச் சொல்லை உருவாக்கவும் ஏற்ற மொழி. "இரயில்", "சைக்கிள்" என்பன தமிழ் நாட்டுப் பொருள்களல்ல. அதற்குத் தமிழில் தொடர்வண்டி, மிதிவண்டி என மிக எளிதாகப் பெயரிட்டு விட்டனர். எத்தனையோ கலைச்சொற்களை உருவாக்கலாம், உருவாகக முடியும். அதற்கு எந்தமொழியின் துணையும் தேவையில்லை. இதுகாறுங் கூறியவற்றால் தமிழ் தனித்து இயங்கிவரும் ஓர் உயர்தனிச் செம்மொழி என நன்கறியலாம்.

Free Web Hosting