சுட்டுத்தோற்றம்

 ஐஞ்சுட்டுக்கள்

முந்திய தமிழன் முதலாவது கைகாற் சைகையையும் (gesture), கண் சாடையையும் முகக்குறிப்பையும் (grimace) கருத்து வெளியிடும் வாயில்காளாகக் கொண்டிருந்து, பின்பு, வாய்ச்சைகை காட்டுமுறையில் சில ஒலிகளைப் பிறப்பித்தான்.

      சேய்மைச்சுட்டாக வாயைப் படுக்கயாய் அகலித்தபோது 'ஆ' என்னும் ஒலியும், அண்மைச்சுட்டாக வாயைக் கீழ்நோக்கி விரித்தபோது 'ஈ' என்னும் ஒலியும், முன்மைச்சுட்டாக வாயை முன்னோக்கி குவித்தபோது 'ஊ' என்னும் ஒலியும், உயரச்சுட்டாக வாயை ஒடுக்கி நட்டுக்கு அகலித்தபோது 'ஓ' என்னும் ஒலியும் பிறந்தன. இவை வாய்ச்சைகை யொலிகள்.

   ஐஞ்சுட்டுக்களையும் ஒலித்தற்கேற்ற வாய்நிலைகள் வெவ்வேறு. ஒன்றற்குரிய வாய்நிலையில் வேறொன்றை ஒலிக்க முடியாது. ஓகாரத்திற்குரிய நிலையில் மட்டும் ஆகாரத்தை ஒருசிறிது ஒலிக்கலாம். ஒலித்துக் காண்க.

    பின்னர், வயிறார வுண்டபின் அடிவயிற்றினின்று மேனோக்கி யெழும் காற்று ஏகாரவடிவாய் வெளிப்பட்டதினின்று, 'ஏ' என்னும் ஒலி எழுகைச்சுட்டாகக் கொள்ளப்பட்டது. உண்டபின் வயிற்றினின்று எழும் ஒலியை ஏப்பம் என்று தமிழிலும் 'eructation' என்று ஆங்கிலத்திலும் ஏகார எகர முதற்சொல்லாகக் கூறுதல் காண்க. ஏப்பம் விடும்போதே சிலர் ஏவ் என்றும், சிலர் ஏப்பம் என்றும் ஒலிப்பது வழக்கம்.

   ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்னும் ஐந்தும் தனியுயிர் னெடில்களும் குறுகி முறையே அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்து தனியுயிர்க் குறில்கள் தோன்றின. பின்னர், அகரத்தொடு இகர உகரங்கள் புணர்ந்து முறையே ஐ, ஔ என்னும் உயிர்ப் புணரொலிகள் தோன்றின.

  இங்ஙனம் ஆ ஈ ஊ ஏ ஓ என்னும் தனியொலிகளான ஐந்நெடில்களும் சுட்டொலிகளாக முதலாவது தோன்றின.

 
 
 
Free Web Hosting