:: ஆலயம் — தமிழாலயம்

     

     தொடக்கநிலை மாந்தர் கண்ட அறிவுத்தெளிவுக்கேற்ப ஆலயமாகிய கோயிலமைப்பும் வேறுபட்டு வளர்ந்து இன்றுள்ள நிலையை அடைந்துள்ளது.

 

      ஊனுடம்புக்குள்ளே உறுப்பொருள் கண்டவர்கள் அப்படிக் காணமாட்டாத நிலையிலுள்ளவர்களுக்காக ஆலயம் அமைத்தனர். ஊனுடம்புக்குள் அமைந்திருக்கும் இறையருள் நுகர்வுக்கான நெறிப்பாடுகளை மூலமாகக்கொண்டு முதலில் புற நிலையில் விளங்கிக்கொண்டு; பிறகு, அவரவர் தத்தம் பக்குவ வாய்ப்புக்கு ஏற்றவாறு உள்முகமாக உணர்ந்து: ஊனுடம்புக்குள் அணுகுமாறு வழிபாடு உதவ வேண்டும்.

 

        இன்றுள்ள மத அறிஞர்களும் இவ்வுண்மையை இன்னும் மறக்காமல் சொல்லி வருகின்றனர். ஆனால், வரவர ஆலய நிலைமை திசைமாறிப் போகலாயிற்று.

 

        இனி, இதற்கான ஆலயம் என்பது திருத்தியமைப்புக்கு உட்பட்டதுதான். அதானால்தான், சத்திய ஞான சபையைத் திருவருட் பேரொளி வள்ளலார் நிறுவியுள்ளார்.

 

       மெய்யாகவே, ஆதிநாளில் ஒருமைநேயத்துடன் எழுப்பப்பெற்றப் படமாடக் கோயில்கள், தாம் எழுந்த புதிதிலும் அதன்பின்னரும் பயன்பல தந்தன என்பதற்கு மாற்றுக் கருத்தில்லை.

 

   ஆனால், காலவோட்டத்தில் தமிழ்மக்களை வழி நடத்திய தலைமக்களின் கருத்தோட்டத்தில் உண்டான விரிவாக்கப் புனைவுகளால் அதில் கலைமெருகு ஏறிய அளவுக்குக் கருத்துமுறைத் தெளிவு ஒத்து ஏற்றம்பெற்று வளர்ந்திடவில்லை.

 

         இளமையில், தாம் போற்றியொழுகிய கோயில் வழிபாட்டை வள்ளல்பெருமான் நடுவிலும் முதிர்சியிலும் அவற்றைக் குறித்து வலிவுறுத்தாமல், வம்புவழக்குகளிலும் இறங்காமல், பூர்வ ஞானச்சிதம்பரம் இருக்க, தாம் ஓர் உத்தர ஞானச்சித்தம் பரத்தை நிறுவி ஆண்மநேயம் சொல்ல வந்த காரணம் என்ன? தில்லைவாழ் தீட்கையர்கள் வள்ளலாரின் பரிந்துரையை ஏற்றிருப்பின், வடலூர் சத்தியஞானசபை உருவாகியிருக்காது. அருளாளருக்கே இணங்காதவர்கள் யார்க்கு இணங்குவார்களோ?

 

      இதற்குத் தமிழ்முனிவர் திரு.வி.க. அவர்கள் திருவாய்மலர்ந்தது போல் ஆன்மநேய நடைமுறைக்கு மாறாக அங்கு மலிந்துவிட்ட சீர்கேடுகளேயன்றி, அக்கோயில்கள் அல்ல என்பது தெளிவு.

 

      முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களும் ஏனைய ஓரிறை ஒருநெறி என்னும் பாங்கில் சிந்தித்துச் செயல்கண்ட அறிஞர் பெருமக்களும் மெய்யறிவர் பெருமக்களும் மிகப் பழங்காலத்தில், ஒரு கோயில் ஒரே தெய்வம் என்னும் அமைப்பில்தான் ஆலயம் அமைந்திருந்தது என்று விளக்கியுள்ளனர்.

 

        அதற்கும் முன்பாக, கருவறையில் ஒரே தீபத்தீபம் மட்டுமே இருந்து வந்துள்ளது என்றும் உரைக்கின்றனர். அந்த அமைப்பில், இன்றுங்கூட சில கோயில்கள் உள்ளனவாம். அந்த ஆதிநெறியையே வள்ளலார் மீண்டும் புதுப்பித்தார்.

 

     ஒரு கோயிலில் பல தெய்வங்கள் என்னும் அமைப்புமுறை பிற்பட்டதாகும். இது தெய்வம் பலபல என்று சிந்தைசெய்து பழகிவிட்ட மனப்பான்மையினால் பெற்ற உருமாற்றமாகும். பல்வேறு வகையான தெய்வநம்பிக்கைகளின் ஒன்றுகலப்பே இன்றைய கோயில் அமைப்பாகும். ஓருருவமும் இல்லாத ஒருவரேயாகிய ஆண்டவனுக்குப் பலவான தெய்வத் திருமேனிகளையல்லாம் அவர்தம் திருவுருவங்களாகவும் அப்படி அமைவதற்குக் காரணங்காட்டும் தொன்ம(புராண) நிகழ்ச்சிகளும் பின்னியுரைக்கப்பட்டுள்ளன.

 

        இதானல், இன்ன தெய்வத்துக்குத்தான் முதல் பூசை, அடுத்து இன்னின்ன தெய்வத்துக்கு என்றெல்லாம் புதிய விதிமுறைகள் மக்களாலேயே உண்டாக்கிக்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்ந்து பலதெய்வ உணர்வை மக்களிடையே நிலைபெறச் செய்துவிட்டது.

 

       சலம்பூ வொடு தூபம், தமிழோடிசை பாடல் எனவும் இறைவற்கு ஒரு பச்சிலை எனவும் எளிமைபெற இருந்த தொடக்கநிலை ஓரிறை வழிபாடு காலந்தோறும் விரிவு கண்டு ஆடம்பரக் போக்கில் போகநேர்ந்தது. திருமுருகாற்றுப்படயில் பழைய இயற்கைமுறை வழிபாடு பதிவாகிக் கிடக்கிறது; திணை நிலை வழிபாட்டுநெறி மதநெறியாக வளர்ந்த வகையும் தெரிகிறது.

 

   ஒப்பிலியப்பன் என்னும் திருப்பெயர் பெற்று விளங்கிவந்த திருமால் கோயிலில், தலைமுறைதலைமுறையாகப் பூசனைப் புரிந்துவந்துள்ள பூசர்களும் தமிழறிவில் தேய்ந்துவிட்ட காலத்தில், அத்திருப்பெயர் உப்பிலியப்பன் என மாறிவிட்டதாம். அதனால், அப்பெருமாளுக்கு உப்பில்லாத திருவமுது படைக்கப் பட்டுவருவதாகச் சொல்லின் செல்வர் இரா. பி. சேதுபிள்ளை ஆற்றங்கரையினிலே எனும் நூலில் விளக்கியுள்ளார்.

 

     இந்நிகழ்வு, திரிபுகள் எவ்வாறு ஏற்பட்டு நிலைத்து மாற்றமுடியாத தெய்வச் சட்டங்களாக மாறி வந்துள்ளன என்பதற்கு ஒரு நற்சான்று. இன்று, யார் எடுத்துச்சொல்லியும் இன்னமும் ஒப்பிலியப்பன் உப்பிலியப்பந்தான்.

 

        எனவே, இறைமைப்பேற்றுக்கு நெறிப்படுத்தும் பக்குவத்திற்குச் செல்ல உதவுகின்ற அமைப்பில்தான் இதற்கான ஆலயமும் அதன்கண் வழிபாடும் அமையவேண்டும் என்பது இன்றியமையாதது அல்லவா?

 

       வள்ளலார் சாலை—சங்கம் - சபை எனும் மூன்றையும் இதற்காக அமைத்துத் தந்தார். இவற்றைச் செந்தண்மை நெறிக்கு முரணில்லாத நிலையில் இக்கால அமைப்பியல் தேவைகளையும் உள்ளிணைத்துச் சபை என்னும் வழிபாட்டு மன்றினை நடுவில் அமைத்துக்கொள்ளல் இன்றியமையாதது. சத்திய ஞானசபை என்று வள்ளலார் பெயரிட்டுள்ளார். தமிழ்த்தூய்மை கருதி அதனை மெய்யறிவுத் திருச்சபை அல்லது மெய்யறிவித் திருமன்று என அழைப்பது சாலும். இங்கு அடிப்படையான தொடக்கநிலைவழிபாடு நினைப்பு வழிபாடே. மெய்ம்ம உருவுசார்ந்த வழிபாடுகள் இருக்கமாட்டா.

 

       நூலகம், பொது மண்டபம், மாநாட்டு அரங்கம், குருமார் பயிலகம், சிறார் வகுப்பு முதலான ஏனைய புறவசதிகளையும் அதற்குக் குந்தகம் இல்லாத அளவில் சுற்றுப்புறத்தில் அமைத்தல் வேண்டும்.

 

     புறவசதிகளையும் உள்ளிட்டு அமைவதால் அதற்குத் தமிழாலயம் என்று பெயர் கொள்வது தமிழ்ச்சமயம் அல்லது தமிழ்நெறி என்னும் கொள்கைமுறைக்குச் சாலப் பொருந்துவதாகும்.

ஆசிரியர் : திரு. இர. திருச்செல்வம் ( தமிழியல் ஆய்வுக் களம் )

Free Web Hosting