:: வழிபாட்டுப் படிகள்

 

சீலம்   (சரியை) அறஞ்சார்ந்த உடலூழியம்

நோன்பு (கிரியை) உடல்—மனச் செயற்கட்டுப்பாடு.

செறிவு ( யோகம்) மனவொருக்கம் -உயர்நிலை அகத்தவம்

அறிவு ( ஞானம்) பற்றற்ற பற்றுநிலை—தன்னையறிதல்.

 

இவை நான்கும் ஒன்றோடொடன்று ஒட்டித் தொடர்புபட்டுள்ளவை, ஒன்றில் ஒன்று முளைத்து முற்றிமுதிர்பவை. இவற்றை அறும்பு, மலர், காய், கனி என்று பருவ வரிசைபட நிரந்து தொடர்ப்புபடுத்திக் காட்டுவர் தாயுமானவர்.

 

சீல வழிபாட

 

சீல் = நேர், ஒழுங்கு. [சீல்>சீர்=நேர், ஒழுங்கு, நன்னடை,செவ்வை. சீர்மை = ஓரொத்த ஒருமைத்தன்மை]

சீலம் = நேர்படவொழுகும் ஒழுக்கம். நேர்படவொழுகு என்பது ஔவைமொழி.

 

சீலம் என்பது இருமுதுகுரவர்களாகிய பெற்றொர், பெரியோர், மூத்தோர், மன்னர், மற்றுள்ள மாண்பமைந்தொர் ஆகிய ஐங்குரவர் வழியில் மனம்,மொழி,மெய்,ஆகிய மூன்றாலும் பொய்யாமல்-புரைபடாமல் நல்ல ஒழுகலாறுகளில் படிந்து நடந்து பழகுதல்—பழகிப் பண்படுதல்-பண்பாடு அடைதல்-சமைதல்.

இது அகத்திலும் புறத்திலும் இறைவன்பால், கொண்ட அன்பினால் மேற்கொள்ளும் பணிவன்புகளாலான நாள் வழிபாடு, சிறப்பு வழிபாடுகளாலும் இறையருள் கனிந்த பெரியோர் படிவிக்கும் வண்ணம் படிந்து எல்லா உயிர்களுக்கும் தன்னால் ஆன வகையிலெல்லாம் அறஞ்சார்ந்த பணிவிடைகள் மற்றும் ஊழியங்கள் செய்வதாலும் அமைவது. இதனை,

 

கண்ணில் காண்பதும் காட்சி கை யால்தொழில்

பண்ணல் பூசை பகர்வது மந்திரம்

மண்ணொடு ஐந்தும் வழங்குயிர் யாயுமே

அண்ண லேநின் அருள்வடி வாகுமே.

 

 

நோன்பு

நோல்+பு > நோன்பு. [ பொறுமை, அமைதி இழக்காமை]

நோல் + தல் > நோன்றல் / நோற்றல்.

நோற்பார் = நோன்புள்ளவர், நோன்பாளர், நோன்புகொண்டிருப்பவர்.

நோன்பு எனப்படுவது, உடலாலும் உள்ளத்தாலும் செய்யும் உண்ணாமை-பருகாமை, நயவாமை போன்றவையாகும். பசி, தாகங்களை உடலாலும் உள்ளத்தாலும் பொறுத்து இருத்தல் - தாங்கிக்கொள்ளுதல்.

      நோன்பினால் அகவொளி - உள்ளொளி பெருகும். அறிவும் உணர்வும் நிலைதிரிந்து போகாது ஒருநிலைப்பட்டு நிற்கும். உற்றது நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை என்பது இதற்குரிய செயல்நிலை இலக்கணம்.

    மேலும் நாம் எடுத்துச் செய்கின்ற செயல்கள் -தொழில் முதலியவற்றில் வருவதை இருவழியிலும் ஏற்றுத் தாங்கிக்கொண்டு- பொறுமைபழகி, எவர்க்கும் எவ்வுயிர்க்கும் இன்னா செய்யாமல் மனமிரங்கி நன்மையே புரிந்து இறைவன்மேல் பாரத்தை வைத்துப் பழகும் செயற்பாட்டு- செயற்கட்டுப்பாட்டுப் பயில்வுநிலை.

   இதுதான் தம் கருமம் செய்வதாகியத் தவம் எனத் முழுமுதற் பொதுமறை சாற்றுகின்ற செய்தியாகும். இங்கே தன்னைத்தானே நெறி செய்வது அதிகம். சீல நிலையில் பிறரால் நெறிப்படுத்துவது அதிகம். முன்பு பிறர்க்காக அவர்கள் சொன்னபடி ஏற்றுச் செய்வதற்றைத் தானாக மனம்விரும்பிச் செய்வது நோன்பு.

     இமைப்பொழுதும் இறைவனை உள்ளத்தில் மறவாத அன்புடன் எச்செயலையும் அவனுக்கு உரிய பூசையாகக் கருதி, எல்லாம் தனக்குமட்டும் என்று பற்று பாராட்டாமல் தொண்டு செய்துவருதல். சீல நிலையில் செய்துகொண்டுவந்த, நாள்வழிபாடு, சிறப்பு வழிபாடுகள் இங்கும் தொடரும்.

   இவையல்லாமல், ஏதோ ஒரு விருப்பம் அல்லது தேவை நிறைவேற வேண்டும் என நேர்ந்துகொண்டு மேற்கோள்களும் நோன்புகள் எனபன கருமவேட்டல்களே ஆகும்.

ஓகவழிபாடு

    உலகு என்னும் சொல்லின் அடியாகப் பிறந்ததே ஓகம் எனும் சொல்லாகும். ஒன்றித்தல் - ஒன்றுதல், ஒருக்குதல் எனபதுதான் அதன் கருத்து மூலம்.

உகு > ஒகு > ஒக்கு

ஒக்கு + தல் > ஒக்குதல் = ஒத்தல், ஒத்திருத்தல், ஒன்றாதல், ஒருமித்தல்.

உகு > ஒகு > ஓகு > ஓகம் = பொறி புலன்கள், மனம் முதலிய கரணங்கள் போன்றவற்றால் அமைந்த மெய்க்கூறுகளின்வழி வெளிமுகமாக உயிர்ப்பையும் ஆற்றலையும் வீணடிக்காமல் உள்முகமாகத் திருப்பி ஒருக்குவது ஓகம்.

    இங்கு கூறப்பெறும் கடிவு என்னும் இயமும் படிவு என்னும் நியமும் சீலம்நோன்புகளில் அரும்பும் மலரும் போன்று இருந்தவை. இது காய்ப்பருவம். அரும்பானது ஆறு பருவத்தால் மலரானது; மலரானது பூம்பிஞ்சு - பிஞ்சு, இளங்காய் - காய் - கடுங்காய் - பழக்காய் என ஆகப்பெறுவதே ஓகநிலை.

  செறிவு என்னும் சொல்லும் ஓகு > ஓகம் எனும் கருத்தைச் சற்றும் மாறாமல் கொண்டுள்ளதைக் காண்க. இந்த ஓகு > யோகு எனவும் சொல்லப்படும். வடவர் நூள்களில் இந்த செந்தமிழ்ச் சொல்லை யோகம் > யோகா எனத் திரித்துக் கூறுவர்.

   ஓகப்பயிற்சியை இருந்துசெய்யும் இருப்புநிலைகள் உள்ளன. அவற்றை இருக்கை, ஆதனம் அல்லது ஆசனம் என்பர். ஆசனங்களைக் கொண்டமையும் பயிற்சி என்பதால் அதனை ஓகாசனம் ( யோகாசனம்) என்பர். அது எட்டுவகைப் பயில்வுமுறைகளைக் கொண்டது. ஆகையால், எட்டங்க ஓகம் எனப்பெறும். அது வடநூல் புணர்ச்சியில் அஷ்டாங்க யோகம் எனப்படும்.

தொல்காப்பியர் இதனை நால் இரு வழக்கில் தாபதப் பக்கம் என்பார். அதனால், அடையப்பெறும் எண் (எட்டு) பெரும்பேறுகளே எட்டுமாசித்திகள். அவை அணுமை(அணிமா) முதல் வயன்மை ( வசித்துவம்) வரை எட்டாகும் வடநூலார் இவற்றை அஷ்டமஹாசித்தி என்பர். வள்ளலார் கணக்குப்படி சித்திகள் எண்ணிறந்தவை. இந்த எட்டுங்கூட கருமசித்திகள் என்பார். சித்திகள் கருமசித்தி - ஓக(யோக) சித்தி- ஞானசித்தி என மூவகைப் பட்டுள்ளன. 6400 சித்திகள் உள; கிளைகள் இன்னும் பல.

அறிவு வழிபாடு.

   இறைவனோடு ஒன்றுதலே ஓகம். அதனால் கூடப் பெறுவதே தன்னை அறிதலாகிய அறிவம் ஆகும். இதனை வட நூலார் ஞானம் என்பர். இது பேசரியப் பெருநிலை. இதனை ஒருவாறு நம்மை போன்றோர் புரிந்துகொள்வதற்குத் திருமூலர்,

 முகத்துக் கண்கொண்டு கான்கின்ற மூடர்கள்

அகத்துக் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்

மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய

சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே?

என்று உருவக்மாகச் சொல்லுவார். இந்தத் தன்னை அறிதலே ஆத்மவிசாரம் என்பர் வடவர். ஆத்ம விசாரத்தால் அடையப்பெறுவது ஆத்மதரிசனம் எனும் தற்காட்சி. இதனை மாசறுகாட்சி, புலம்வென்ற புன்மைஇல் காட்சி எனத் தமிழ்மறை குறிப்பிடும்.

   ஞானிகளைக் காட்சியார் - காட்சியர் - காட்சியுடையார் எனவும் மெய்பொருளியலைக் காட்சியியல் எனவும் பழந்தமிழ் மறைநூலர் கூறுப.

    இப்படி தனக்குத்தானே சமைந்து ஒருக்கமுற்று இருள்சேர் இருவினைகளை அறுத்த புலம்வென்ற புன்மையில் காட்சியர்களையே வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

   இவற்றையே மறுபாகுபாடு செய்து வடதமிழர் வழிவந்த மறைமுடிபு ( வேதாந்த) நூல்களில் ஓகம் ( யோகம்) என்பர். வடதமிழர்களிடமிருந்து கற்றுப்பெற்றுக்கொண்ட பின்னர், ஆரியர்கள் அவற்றை ஆரியமயமாக்கிக் கொண்டனர்.

        உலகத்திலுள்ள வேறு எந்த இனத்துக்கும் தெரியாத இவை இந்திய ஆரியருக்கு மட்டும் தெரிந்ததெப்படி?

 

ஆசிரியர் : திரு. இர. திருச்செல்வம் ( தமிழியல் ஆய்வுக் களம்)

Free Web Hosting